9 வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்...!

9 வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்...!

ஒரே பூமி, ஒரே குடும்பம் என்பதை கருப்பொருளாக கொண்டு 9 வது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

9-வது சர்வதேச யோகா தினம் டெல்லி, மும்பை கேட் வே ஆஃப் இந்தியா, உத்தரகாண்ட் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மக்களவை சாபாநாயகர் ஓம்பிர்லா தலைமை வகித்த நிலையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கேரள மாநிலம் கொச்சி கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்ட ஐ என் எஸ் விக்ராந்த் கப்பலில், மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் யோகா தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மும்பை கேட் வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிக்க : தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு உறுப்பினர்கள் நியமனம்...!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோரும், ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் யோகாசனம் செய்தனர்.

இதனிடையே இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் மோடி, காணொலி மூலம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அழைப்பின் பேரில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது எனதெரிவித்த பிரதமர், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு யோகா தினத்திற்கான முன்மொழிவு வந்தபோது, ​​அது சாதனை எண்ணிக்கையிலான நாடுகளால் ஆதரிக்கப்பட்டதாக கூறினார்.