முதல் முறையாக நாட்டு பசுவிற்கு செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த கன்று!

முதல் முறையாக நாட்டு பசுவிற்கு செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த கன்று!

நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் நாட்டு பசுவிற்கு கன்று பிறந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி  ஏழுமலையான் கோயில் மற்றும் பத்மாவதி தயார் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகத்திற்கும்,  தீபம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய பால், வெண்ணெய், நெய் ஆகியவை நாட்டு மாட்டு பாலை கொண்டு  செய்யப்படுகிறது. 

இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து பசுக்களை வாங்கி வந்து தேவஸ்தானமே பாலை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அழிந்து வரக்கூடிய  நாட்டு மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் தேவஸ்தானத்திற்கு தேவையான பால், நெய், வெண்ணெய் ஆகியவை சொந்தமாக தயாரிக்க அப்போதைய செயல் அதிகாரி ஜவகர் முடிவு செய்தார். இதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வர பல்கலைக்கழகத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதற்கு தேவையான அறிதான நாட்டு மாடுகளை உற்பத்தி செய்யவும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக நாட்டு மாடுகளின் கலப்பினத்தை உருவாக்கவும் செயற்கை கருவூட்டல் ஆய்வகம் அமைக்க தேவஸ்தானம் சார்பில் ₹ 3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சாஹிவால் என்ற இனத்தை சேர்ந்த நாட்டு மாட்டின் கரு, ஓங்கோல் ரக மாட்டின் கருமுட்டையில் வைக்கப்பட்டது. இந்த மாட்டிற்கு நேற்று மாலை கன்று பிறந்தது. இது நாட்டிலேயே முதன்முறையாக கரு பரிமாற்றம்  மூலம் பிறந்த கன்றாகும். இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா திருப்பதியில் உள்ள எஸ்.வி.கோசாலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டியின் அறிவுறுத்தலின் பேரில், தேவஸ்தானம் மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஆண்டு தேசிய பசு மாட்டு இனங்களை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  இதன் ஒரு பகுதியாக  நாட்டு மாடு இனத்தை உருவாக்க எஸ்.வி.கோசாலையில் நாட்டு மாடுகளிடமிருந்து கரு முட்டைகள் சேகரிக்கப்பட்டு, எஸ்.வி.கால்நடை பல்கலைக்கழகத்தின் ஐ.வி.எஃப் ஆய்வகத்தில் செயற்கை முறையில் கருக்கள் உருவாக்கப்பட்டன.  நாட்டிலேயே முதன்முறையாக தேவஸ்தான கோசாலையில் உள்ள மாடுகளில் இவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஓங்கோல் பசுவிற்கு பிறந்த சாஹிவால் கன்றுக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயில் அபிஷேகம் மற்றும் தீபம் ஏற்ற, நைவேத்தியம் செய்ய ஏற்கனவே 200 நாட்டு மாடுகளை நன்கொடையாளர்கள் வழங்கியுள்ளனர். மேலும் 300 நாட்டு மாட்டு பசுக்களை வழங்க தயாராக உள்ளனர். மாடுகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அதிக பால் கொடுக்கும் விதமாக அதற்கான ஊட்டச்சத்து மிகுந்த தரமான தீவனம் தயாரிக்க கோசாலையில் தீவன உற்பத்தி ஆலை  தொடங்கப் பட்டுள்ளது. கோசாலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் லிட்டர் வரை பசும்பால் உற்பத்தியும், பாரம்பரிய முறைப்படி நாள் ஒன்றுக்கு 60 கிலோ சுத்தமான நெய் தயாரிக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க:"செப்டம்பர், அக்டோபரில் சாலைகளை தோண்ட அனுமதி அளிக்கக்கூடாது" எ.வ.வேலு அறிவுறுத்தல்!