24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம்-புதுச்சேரி அரசு அறிவிப்பு!

பெண் ஊழியர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு முதலாளியும், பாலினத்தின் கீழ், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள்ள புகார்க் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம்-புதுச்சேரி அரசு அறிவிப்பு!

புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பு குறித்த அரசாணை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அனுமதியுடன் தொழில்துறை சார்பு செயலர் முத்துமீனா பிறப்பித்துள்ள ஆணையில், இந்திய தொழிற் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில் புதுச்சேரியில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க : என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டுமாம்! மாநில உரிமைகளை கைவிடுகிறதா அதிமுக?

முதலாளிகளுக்கு எச்சரிக்கை

பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும் எனவும், பணியாளர்கள் ஏதேனும் விடுமுறையில் அல்லது சாதாரண பணி நேரத்திற்குப் பிறகு கூடுதல் நேரம் சரியாக குறிப்பிடாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டால், முதலாளி அல்லது மேலாளர் மீது புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஆந்திரா: மூன்று தலைநகர திட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம்...!

பெண்களுக்கான குழு

பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை என்றும், பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, வேலை வழங்குபவர் அவர்களை இரவு 8மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம். அவ்வாறு பணிபுரியும் பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண் ஊழியர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு முதலாளியும், பாலினத்தின் கீழ், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள்ள புகார்க் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.