என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டுமாம்! மாநில உரிமைகளை கைவிடுகிறதா அதிமுக?

என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டுமாம்! மாநில உரிமைகளை கைவிடுகிறதா அதிமுக?

பல்வேறு குற்ற செயல்கள் புரிவோர்களின் நடவடிக்கைகளை புதுச்சேரியில் சரியான முறையில் கண்காணிக்கப்படுவதில்லை என அதிமுக கூறியுள்ளது.

என்.ஐ.ஏ அலுவலகம்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச்  சந்தித்தார் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன். தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தீவிரவாத செயல்களின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல், மதத்துடன் சம்பந்தப்படுத்தி ஓட்டு வங்கிக்காக அற்ப அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 

தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தி அதை முற்றிலுமாக ஒடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) கிளை அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தற்பொழுது அறிவித்துள்ளார். மேலும்  மற்ற மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமையின் கிளை அமைக்கப்படும் பொழுது ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியிலும் என்.ஐ.ஏ தேசிய புலனாய்வு முகமை அமைக்கப்பட வேண்டும் என கூறினார். 

மேலும் படிக்க : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆசிய பயணங்கள்...!!!!

கடலோர பிராந்தியம் 

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு கடற்கரை பகுதிகள் உள்ளடக்கிய பிராந்தியமாக உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பல நேரங்களில் நாடே திரும்பிப் பார்க்கும் விதத்தில் அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. என்றும், சுற்றுலா என்ற பெயரில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தங்கு தடை இன்றி புதுச்சேரியில் தங்குவதும், அவர்களில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளது. ஆரோவில் போன்ற சர்வதேச நகரம் புதுச்சேரி மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இருப்பதால் அந்நிய நாட்டைச் சேர்ந்த பல தீவிரவாதிகளும் புதுச்சேரியில் தடையின்றி சுற்றி வருகின்றனர். 

எனவே தேசிய அளவில் பல்வேறு குற்ற செயல்கள் புரிவோர்களின் நடவடிக்கை இங்கு சரியான முறையில் கண்காணிக்கப்படாததால் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமையின் ஒரு அமைப்பை இந்திய அரசு உடனடியாக புதுச்சேரி மாநிலத்தில் அமைக்க வேண்டும் என கூறினார். இதில் உள்ள உண்மை நிலையை  துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் அவர்கள் கலந்து பேசி புதுச்சேரி அரசு சார்பில் இந்திய அரசு புதுச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அமைக்க வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க : நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஐடி திருத்த விதிகள்....நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் என்னென்ன?...தெரிந்து கொள்ளலாம்!!!

பணிகள் நிரப்பப்படும்

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் நிரப்பப்படாமல் உள்ள 10,000 பணியிடங்களில் அரசு தற்போது 2000 பணியிடங்களை நிரப்ப உள்ளது. தற்போது நடைபெற உள்ள யுடிசி தேர்வு நேர்மையான முறையில் தேர்வு நடைபெறும். பணம் கொடுத்தால் வேலை வாங்கிதருவதாக யாராவது கூறினால் அவர்கள் குறித்து இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும். காவல் துறையினரும் இதுகுறித்து உரிய விசரணைகளை நடத்த வேண்டும் எனவும் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்