குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியா?

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியா?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு போட்டியாக பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவார், பரூக் அப்துல்லா ஆகியோரை அனுகிய நிலையில் அவர்கள் அதனை மறுத்துவிட்டனர். இதை தொடர்ந்து கோபால கிருஷ்ண காந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவரும் நிராகரித்தார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது டுவிட்டர் பதிவு மூலம் நிரூபணமாகியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜிக்கு தனக்கு வழங்கிய மரியாதை மற்றும்  கௌரவத்திற்காக தான் அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும்  மிகப்பெரிய தேசிய நோக்கத்திற்காக திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகுவதாகவும் எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் பதிவிட்டுள்ளார். 

இதன் மூலம் குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வை முன் நிறுத்த எதிர்கட்சிகள் தரப்பில் ஒரு மனதான முடிவு செய்யப்பட்டுள்ளது பட்டவர்த்தனமாகியுள்ளது. இதேபோல் விரைவில் பாஜக தரப்பிலும் குடியரசு தலைவருக்கான வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.