காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே...ராஜினாமா கடிதம் வழங்கிய நிர்வாகிகள்!

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே...ராஜினாமா கடிதம் வழங்கிய நிர்வாகிகள்!

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற நிலையில், அக்கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ்  கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் பதவி விலகினார். அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் தலைவர் என்பதே இல்லாமல்,  இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். ஆனால், வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமித்திடவும், கட்சியை வலுப்படுத்திடவும் திட்டமிட்ட அவர்,  தலைவர் தேர்தலை அறிவித்தார்.

மல்லிகார்ஜுனகார்கே தேர்வு:

அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கேரள எம்.பி சசிதரூர் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிக்க: கார்கேவின் அரசியல் பயணமும் அவர் முன் உள்ள நான்கு முக்கிய சவால்களும்...!!!

மல்லிகார்ஜூனகார்கே இன்று பொறுப்பேற்றார்: 

இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பொறுப்பேற்ற நிலையில், அக்கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் குடும்பத்தை சாராத கார்கே, 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அக்கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.  

ராஜினாமா கடிதம் வழங்கிய கமிட்டி உறுப்பினர்கள்:

இதையடுத்து அவர் கட்சியில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதிய உறுப்பினர்களை நியமித்து கட்சியை ஒன்றிணைக்க முயற்சிப்பார் என தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து காரிய கமிட்டி உறுப்பினர்கள், காங்கிரஸ் பொது செயலாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் ராஜினாமா கடிதத்தை கார்கேவிடம் வழங்கியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி வேணு கோபால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.