விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிப்பு...

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார்.

விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி  கவுரவிப்பு...

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இந்திய படைத்துறையினருக்கான விருது வழங்கு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், போர்க்களத்தில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதன்படி பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வந்ந ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை இந்திய விமானப்படை அழித்தது.

இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, பாகிஸ்தான் நாட்டு எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் விங் கமாண்டர் அபிநந்தன். அப்போது அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானமும் விபத்துக்குள்ளானதில் பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார்.

பின் இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை பாகிஸ்தான் அரசு மார்ச் 1 ஆம் தேதி விடுவித்தது. இந்தியா திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனும்  “பாகிஸ்தான் தரப்பு தன்னை உடல் ரீதியாக துன்புறத்தவில்லை என்றும், அதே நேரம் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.