பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை யாருக்கு?!!

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை யாருக்கு?!!

கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கும் இடையே அதிருப்தி நீடித்து வருகிறது. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்க முடியாது என ஆளுநர் தெளிவாக கூறியதையடுத்து வாக்குவாதம் பெரியதானது. இந்நிலையில், நேற்று இரவு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

கான் -மோகன் சந்திப்பு:

ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 8 மணியளவில் ஆரிப் முகமது கான், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது எனவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையும் பதிலும்:

மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க மத்திய அரசு மற்றும் பாஜக தலையிட வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ”ஆளுநர் ஆரிப் முகமது கான் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தி அவரது கடமையைச் செய்கிறார்.  அவரை அமைதிப்படுத்த முயற்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்றும் பாஜக கூறியுள்ளது.

கம்யூனிஸ்ட் தலைவர்:

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி.கோவிந்தன், “ இந்தப் போராட்டம் திடீரென நடந்ததாகவும், இதில் எந்த சதியும் இல்லை” என்றும் கூறியுள்ளார்.  மேலும், கானின் நடத்தை ஆளுநர் பதவிக்கு உகந்ததாக இல்லை என்று இடதுசாரி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளா முதலமைச்சர்:

இதற்கிடையில், முதலமைச்சர் பினராயி விஜயன்  மாநிலப் பல்கலைக்கழகங்களின் நியமனங்கள் விருப்பத்துக்குரியது கூறப்படும் கானின் கருத்துக்களுக்காக அவரைக் கடுமையாக தாக்கி பேசியுள்ளார் மற்றும் அவரது அறிக்கை மிகவும் "அபத்தமானது" என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’