’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’

’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’

எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.  நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” என்று அரசியல் பயணம் முழுவதும் எதிரிகளால் தாக்கப்பட்டும் வார்த்தைகளால் அவர்களை வலுவிழக்க செய்தவர் அண்ணா.  தமிழ்நாட்டில் முதலமைச்சராக பணியாற்றிய காலம் இரண்டு ஆண்டுகளே என்றாலும் ‘திராவிட மாடல்’ என்ற வலுவான வேரை ஊன்ற செய்து சென்ற மாபெரும் மனிதர் அண்ணா.  “கடின உழைப்பு சோர்வை தருவதில்லை.  மாறாக அது திருப்தியைக் கொண்டு வருகிறது.” என்று கடினமாக உழைத்து தொழிலதிபர்களுக்கு திருப்தியைக் கொடுக்கிறார் பிரதமர் மோடி.  ஒரே மாதத்தில் ஒருநாள் இடைவெளியில் பிறந்தநாள் கொண்டாடும் அண்ணா மற்றும் மோடியின் கடந்த ஆட்சியை  ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

சுதந்திர இந்தியா:

‘இந்தியா@75’ ஐக் கொண்டாடிய மோடி இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிறந்தவர்.  அண்ணா சுதந்திர போராட்டக் காலத்திலேயே வாழ்ந்தவர்.  அதனாலேயே மக்களுக்கு நலன் தரும் திட்டங்களை மட்டுமே சிந்திக்க முடிந்தது போலும்.  புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி வீடு முழுவதும் தேசிய கொடியை பறக்க செய்வதே மக்கள் நலன் என எண்ணினார் போலும் மோடி.

அரசியல் அடித்தளம்:

மோடியையும் அண்ணாவையும் ஒப்பிடும் போது இரு துருவங்களாகவே தெரிகின்றனர்.  அண்ணாவின் அரசியல் அடித்தளம் ‘திராவிட மாடலை’ அடிப்படையாகக் கொண்டது.  ஆனால் மோடியின் அரசியல் அடித்தளமோ ‘ஆன்மீக அரசியலை’ அடிப்படையாகக் கொண்டது.  முன்னவர் மதங்களைக் கடந்து மக்களை ஒன்றாக கண்டவர்.  அவரது முழக்கம் ‘ஒன்றே குலம்; ஒருவனே தெய்வம்’ என்பதாகவே இருந்தது.  பின்னவரோ நாத்திக அரசியலை அடிப்படையாகக் கொண்டு மக்களைப் பிரிக்கும் செயல்களையே செய்து வருகிறார்.  அவரது முழக்கமோ ‘ஒரே நாடு, ஒரே மதம்’ என்பதே.  இந்த வைதீக நோயை போக்கவும் வழிக் கூறியுள்ளார் அண்ணா.  “ பகுத்தறிவு என்னும் மருந்தால் வைதீகம் என்னும் நோயைப் போக்க முடியும்.

விவசாயிகள் நலன்:

உழவனின் உள்ளத்திலே புயல் இருக்குமானால் வயலிலே வளம் காண முடியாது.” என்று கூறியதோடு நில்லாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த அடித்தளம் அமைத்தார்.  அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அவரது வழித்தோன்றல்கள் விவசாயிகளுக்கு இலவசர மின்சாரம் உள்பட அவர்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை செய்து தந்துள்ளனர்.  ஆனால் மோடியோ ‘ மூன்று வேளாண் சட்டங்கள்’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் நலனையே நசுக்க முயற்சித்தார்.  அதற்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்கள் அனைத்தும் நாம் அறிந்ததே.

மொழி:

இந்தியா மக்களாட்சி நாடாக மாறும் போது மக்கள் விருப்பத்திற்கேற்ப மொழிவாரி மாநிலங்களாகவே பிரிக்கப்பட்டது.  “ இந்தியா ஒரு நாடல்ல- அது ஒரு   உபகண்டம்.  ஒரே மொழி அரசாங்க மொழியாவது இயலாதது” எனக் கூறி இறக்கும் வரை இந்தி மொழியை எதிர்த்தார்.  ஆனால் மோடியோ இந்தி திணிப்பை செய்து வருகிறார்.  மக்கள் அவரவர் மாநிலங்களில் அவரவர் மொழிகளை பேசுவதால் என்ன இழப்பு.  இந்தி மொழி திணிப்பால் இந்திய மொழிகள் பல அழிந்து விட்டன.  “ வேற்றுமையில் ஒற்றுமையான” நாடே இந்தியா என்பதை மோடியும் உணரும் காலமும் வருமோ.

அதிகார பரவலாக்கம்:

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து மாநிலங்களும் ‘மாநில சுயாட்சி’ என்பதை வலியுறுத்தி வருகின்றன.  அப்போதுதான் மக்களுக்கு தேவையானவைகளை சிறப்பாக செய்ய முடியும் எனவும் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.  ஜிஎஸ்டி என்ற வரி நள்ளிரவில் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு வருமானம் வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டது.  மக்கள் நலன் சார்ந்த நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியுதவிக்காக மத்திய அரசையே சார்ந்துள்ள நிலையை உருவாக்கியுள்ளது.  சர்வாதிகார அரசை உருவாக முயல்கிறதா மோடி அரசு என்ற சந்தேகமும் உடன் எழாமலில்லை.  “ இந்தியா ஒரு நாடல்ல- அது ஒரு உபகண்டம்.  மக்கள் வாழும் நிலப்பரப்பு.  இங்கே ஒரே ஆட்சி நிலவுவதென்பது முடியாது” என்பதை மோடி அரசு உணருமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

மக்கள் நல அரசு:

அண்ணா பதவியேற்ற காலம் இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்ட காலக்கட்டம்.  இந்தியா உணவில் புரட்சி வேண்டும் என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த நேரமது.  இந்த காலத்தில் மக்களுக்காகவே வாழ்ந்த அண்ணா “ மூன்று படி லட்சியம்; ஒருபடி நிச்சயம்” என்ற வாக்குறுதியை தந்ததோடு அதை நிறைவேற்றி மக்கள் பசியை போக்கியவர்.  ஆனால் மோடியோ ’பண மதிப்பு இழப்பு கொள்கை’யை  அவசரமாக அறிமுகப்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிற்க செய்தவர்.  இத்திட்டம் வெற்றியா நோக்கும்போது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் அரசுக்கு பெருத்த நஷ்டத்தையுமே ஏற்படுத்தியது.

தனியார்மயம்:

தனியார் நிறுவனங்களை பொது நிறுவன்ங்களாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து பல நிறுவனங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் பொது நிறுவனமாக மாற்றியவர் அண்ணா.  ஆனால் மோடியோ லாபத்தில் செல்லும் நிறுவனங்களையும் நஷ்டம் ஏற்படுவதாக கூறி தனியாருக்கு தாரைவார்த்து வருகிறார்.  இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பு ரயில்வே ஆகும்.  உலகின் இரண்டாவது பெரிய ரயில்வே அமைப்பு என்ற பெருமையையும் கொண்டது.  அதையும் தனியாருக்கு சொந்தமாக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மோடி.

மாற்றம் வருமா?:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொண்டால் போதாது.  தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்” எனக் கூறி மக்கள் நம்பிக்கையில் வலுவான அடித்தளத்தை அமைத்து இன்றும் அவரது ஆட்சி அவரை பின்தொடர்ந்தவர்களால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் மோடியோ ” நாங்கள் ஒன்றாகவே நடக்கிறோம்.  ஒன்றாக செல்கிறோம் ஒன்றாக சிந்திக்கிறோம்.  ஒன்றாகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம்.”  எனக் கூறுவது மக்களை குறிப்பிட்டா இல்லை சில பணக்கார முதலாளிகளுக்காகவா என்ற சந்தேகம் எழாமல் கடக்க முடியவில்லை.

மக்கள் நலனாலும் நம்பிக்கையாலும் கட்டப்பட்டது அண்ணாவின் திராவிட மாடல். கல்லாலும் மண்ணாலும் பல கட்டடங்களையும் சிலைகளையும் எழுப்புவதால் மக்கள் நம்பிக்கையை பெற இயலாது.  இதன் பிறகாவது மக்கள் நம்பிக்கையை பெறும் செயல்களை திட்டங்களை கொண்டு வருமா மோடி அரசு.  பிறந்தநாளை கொண்டாடும் இத்தருணத்திலாவது மக்கள் நல அரசு என்ற உறுதிமொழியை ஏற்பாரா?

                                                                                                                                                                                                                                                                                                    - நப்பசலையார்

குறிப்பு: கட்டுரையில் இடம்பெற்ற கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரே பொறுப்பு.  எதிர்வினை வரவேற்கப்படுகிறது.