இந்துக்கள் - இஸ்லாமியர்களுக்கான நேரடி போர் இந்த தேர்தல்: யோகி ஆதித்தியநாத் சர்ச்சை பேச்சு...

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் இந்துக்கள் - இஸ்லாமியர்களுக்கான நேரடி போர் என்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்துக்கள் - இஸ்லாமியர்களுக்கான நேரடி போர் இந்த தேர்தல்: யோகி ஆதித்தியநாத் சர்ச்சை பேச்சு...

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பாஜக உறுதியுடன் உள்ளது.

இந்த நிலையில் மதத்தை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், மத பிளவை ஏற்படுத்தும் வகையிலும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் பேசி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. லக்னோவில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய யோகி, இந்த தேர்தல் 80க்கும் 20க்கும் இடையிலான போர் எனப் பேசியுள்ளார்.

அதாவது உத்தரபிரதேசத்தில் பெரும்பான்மை இந்துகள் மற்றும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்தை 80 - 20 என குறிப்பிட்டு, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை இந்துக்கள் - இஸ்லாமியர்களுக்கான போர் என மித பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது உத்தரபிரதேசத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.