குஜராத் தேர்தல்.. வியூகத்தை மாற்றும் பாஜக...வெற்றி கிடைக்குமா?

குஜராத் தேர்தல்.. வியூகத்தை மாற்றும் பாஜக...வெற்றி கிடைக்குமா?

ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவே யாத்திரை நடத்துவதாக பிரதமர் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸை விமர்சித்த மோடி:

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது நாளாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி, வல்சாத் மாவட்டத்தின் சுரேந்திர நகரில்  தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய பிரதமர், குஜராத்தில் தான் மேற்கொண்ட நலத்திட்டங்களை  காங்கிரஸ் சாத்தியமில்லை என்று கூறிய போது, தான் சாத்தியப்படுத்தியதாக கூறினார். 

மேலும், குஜராத் மாநில கிராமங்களுக்கு மின்சார வசதி குறித்து தான் பேசிய போது சாத்தியமில்லை என்று கூறிய காங்கிரசின் எண்ணத்தை உடைத்து தற்போது குஜராத் கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வகையில் உழைத்துள்ளதாக தெரிவித்தார். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் ஒரு சைக்கிள் கூட தயாரிக்கப்படாத நிலையில், தற்போது விமானத்தையே தயாரிக்கக் கூடிய அளவுக்கு குஜராத் வளர்ந்துள்ளதற்கு பாஜகவே காரணம் என்று கூறினார். 

இதையும் படிக்க: மக்களை ஏமாற்றும் ஆட்சி...நாட்டில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்...குற்றம் சாட்டும் ராகுல்!

தொடர்ந்து பேசிய அவர், தன்னைத் தாழ்ந்த ஜாதி என்றும், சாக்கடைப் புழு என்றும் விமர்சித்ததற்கு கவலையில்லை என்று கூறிய பிரதமர், தன்னைப் பற்றி சிந்திக்காமல் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

குஜராத் என்றால் வளர்ச்சி என்று கூறிய பிரதமர், மாநிலம் முழுவதும் தற்போது நான்காயிரம் கல்லூரிகளும் 600 தொழிற்பயிற்சி நிறுவனங்களும் இயங்கி மாநிலத்தின் கல்வி முறையையே மாற்றியுள்ளதாக கூறினார். ஆனால், கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள்தான் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு யாத்திரை என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளதாக  விமர்சனம் செய்தார்.