மறுஅறிவிப்பு வரும்வரை 1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் கிடையாது... 

புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று இயங்கும் என்றும், அதே நேரத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் கிடையாது எனவும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மறுஅறிவிப்பு வரும்வரை 1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் கிடையாது... 

தமிழகம், புதுச்சேரியில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் மழை ஓய்ந்ததால் இன்று பள்ளிகள் உண்டா இல்லையா என்ற குழப்பம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிலவியது. 

இதுகுறித்து கல்வித்துறை இயக்குநர் பேசுகையில்,  புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று இயங்கும் என்றும், ஒன்று முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் கிடையாது என்றும் உறுதிபடுத்தினார். அதே நேரத்தில் 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனடைவு கணக்கெடுப்பு பள்ளிகளில் நடைபெறும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.