ஆபாசம், வன்முறை இல்லாத திரைப்படங்கள் வெளிவருவது உறுதி செய்யப்பட வேண்டும்: வெங்கையா நாயுடு

ஆபாசம், வன்முறை இல்லாத திரைப்படங்கள் வெளிவருவது உறுதி செய்யப்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆபாசம், வன்முறை இல்லாத திரைப்படங்கள் வெளிவருவது உறுதி செய்யப்பட வேண்டும்: வெங்கையா நாயுடு

பாலிவுட் திரைப்பட உலகின் மூத்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான மறைந்த ராஜ் கபூர், இந்திய திரைப்பட உலகிற்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில், ராஜ் கபூர் தி மாஸ்டர் அட் ஒர்க் என்ற புத்தகத்தை, அவரிடம், உதவி இயக்குநராகப் பணியாற்றிய திரைப்பட இயக்குநர் ராகுல் ரவைல் என்பவர் எழுதியுள்ளார்.  

ராஜ் கபூரின் 97-வது பிறந்த நாளான நேற்று  டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் சிறப்புரையாற்றிய அவர், 1950, 60 ஆம் ஆண்டுகளில் இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய அடையாளத்தையும் திசையையும் ராஜ் கபூர் கொடுத்தார் என்றும், ஒரு முக்கியமான தயாரிப்பாளராகவும் சிறந்த நடிகராகவும் இந்தி சினிமாவுக்கு அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது என்றும் குறிப்பிட்டார்.

திரைப்படங்கள் மக்கள் மனதில் நேர்மறையான எண்ணத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட வெங்கையா நாயுடு,   வன்முறை ஆபாசம் இன்றி சமூக, தார்மீக நெறிமுறையுடன் கூடிய தகவல்களை சொல்லும் திரைப்படங்கள்  வெளிவருவதை  தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.