மேகதாது விவகாரம்; கர்நாடக அரசு கூடுதல் மனு..!

மேகதாது விவகாரம்; கர்நாடக அரசு கூடுதல் மனு..!

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது விவகாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனும் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல்:

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கர்நாடக அரசு கூடுதல் விளக்கம் அளித்துள்ளது. அதில், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உண்மைக்கு புறம்பான விவகாரங்களை கூறி, நீதிமன்றத்தை திசை திருப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மேகதாது அணை என்பது மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டுமானமே தவிர, தமிழகத்துக்கான நீரை தடுப்பதற்கானது அல்ல எனத் தெரிவித்துள்ளது. 

எல்லைக்குள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றலாம்:

உச்சநீதிமன்ற தீர்ப்பில் 177 புள்ளி 25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றே உள்ளது எனவும், அந்த உத்தரவை மீறாமல்  கர்நாடகத்தை பொறுத்தவரை அதன் எல்லைக்குள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றலாம் என்ற உரிமை உள்ளதென்றும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பெங்களூரு மாநகர குடிநீர்:

பெங்களூரு மாநகர குடிநீருக்கு, மேகதாதுவிலிருந்து நீர் எடுப்பது என்பது ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவில் அந்நகரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 புள்ளி 75 டி.எம்.சி தண்ணீரே தவிர, வேறு கூடுதல் நீர் அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மேகதாது விவகாரத்தில், காவிரி நீர்  மேலாண்மை ஆணையம் தனது கருத்துக்களை மத்திய நீர் ஆணையத்துக்கு வழங்க அதிகாரம் உள்ளதாகவும் கர்நாடக அரசு, கூறியுள்ளது.