அப்துல் கலாம் வழியில் சொந்த ஊருக்கு செல்லும் குடியரசுத்தலைவர்... 70 ஆண்டுகால நினைவோடு ரயிலில் பயணம்...

அப்துல் கலாம் வழியில் சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ளும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமது பழைய நண்பர்களுடன் உரையாடி மகிழ உள்ளார்.

அப்துல் கலாம் வழியில் சொந்த ஊருக்கு செல்லும் குடியரசுத்தலைவர்... 70 ஆண்டுகால நினைவோடு ரயிலில் பயணம்...
நாட்டின் முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத், நாட்டு மக்களை சந்திப்பதற்காக சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் நடைமுறையை ஏற்படுத்தினார். இந்த ரயிலானது ஜனாதிபதி சிறப்பு ரெயில் என அழைக்கப்படுகிறது.
 
கடைசியாக, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், கடந்த 2006-ம் ஆண்டு மே 30-ம் தேதி டெல்லியில் இருந்து டேராடூன் வரை ரெயிலில் பயணம் செய்தார். அதன் பிறகு வந்த ஜனாதிபதிகள் யாரும் ரெயில் பயணம் மேற்கொள்ளவில்லை.
 
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின் தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு ரெயிலில் பயணம் செய்ய உள்ளார்.
 
டெல்லியில் இருந்து இன்று பகல் 1.30 மணி அளவில், உத்தரபிரதேசத்தின் கான்பூருக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு அவர் கான்பூரை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லும் இந்த சிறப்பு ரெயில், 2 நிறுத்தங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. ஜின்ஜாக் மற்றும் ரூராவில் இந்த ரெயில் நிறுத்தப்படும். அங்கு தமது பள்ளி மற்றும் ஆரம்பகால சமூக சேவை நண்பர்களை சந்தித்து அவர் பேச உள்ளார். இந்த இரண்டு இடங்களும் ஜனாதிபதி பிறந்த ஊரான பரங் கிராமத்திற்கு அருகே உள்ளன.
 
மேலும், தமது சொந்த கிராமத்துக்கும் 27-ந் தேதி ரெயில் மூலம் பயணம் செல்வார் என தெரிகிறது. ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக அவர் செல்கிறார். அங்கு கிராம மக்கள் சார்பாக ராம்நாத் கோவிந்துக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
 
இதனையடுத்து, வரும் 28-ம் தேதி ரெயிலில் லக்னோ செல்லும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், 29-ம் தேதி சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.
 
தமது குழந்தை பருவத்திலிருந்து நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அலுவலகத்திற்கு வரும் வரை, 70 ஆண்டுகால நினைவோடு ராம்நாத் கோவிந்த் பயணம் செய்கிறார்.