"கர்நாடக அரசிடம் இருந்து காவிரியின் அதிகாரத்தை பறிக்க வேண்டும்" ராமதாஸ் அறிக்கை!!

"கர்நாடக அரசிடம் இருந்து காவிரியின் அதிகாரத்தை பறிக்க வேண்டும்" ராமதாஸ் அறிக்கை!!

காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்தை கர்நாடக அரசிடமிருந்து பறிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காக்க காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அறமும், மனசாட்சியும் இல்லாத கர்நாடக அரசு  தண்ணீர் திறப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே  தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிரான மனநிலை நிலவுகிறது என்ற தோற்றத்தை உச்சநீதிமன்றத்திற்கு ஏற்படுத்தும் நோக்குடன் போராட்டங்களை கர்நாடக அரசு தூண்டி விடுவதாகவும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்பதே கர்நாடகத்தின் நோக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்ற நடுவர் மன்ற நீதிபதிகளின் கருத்துப்படி, பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு  மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க || "சர்வதேச பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" ரஷ்ய அதிபா் புதின்!!