நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குறுகிய விவாதம் நடத்த எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான அறிக்கை அளிக்கக்கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மணிப்பூர் குறித்து பதாகைகளை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரையும் மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியபோது, ஒளிபரப்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் அமளிக்கு மத்தியிலும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் மாநிலங்களவை கூடியபோது, மணிப்பூர் தொடர்பான குறுகிய விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். தொடர்ந்து அமளி நீடித்ததால் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, மணிப்பூர் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக்கூறி எதிர்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதனால் 2.30 மணிக்கும் 3. 30 மணிக்கும் என அமளியால் அடுத்தடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து அவையை சுமூகமாக நடத்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து 3.30 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து மணிப்பூர் குறித்து விரிவான விவாதம் நடத்த கடுமையாக எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க || காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல நடவடிக்கை!!