3 ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

உக்ரைன் - ரஷ்யப் போருக்கு மத்தியில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார்.

3 ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்துவரும் நிலையில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.  

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி பெர்லின் நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.  முதல் பயணமாக ஜெர்மனி புறப்பட்டுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்திக்கிறார். 

இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள், இந்திய - ஜெர்மனி உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மேட்டே பிரெடெரிக்சன்  அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும்  2வது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். 

இதன் ஒருபகுதியாக, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் மோடி கலந்துரையாடுகிறார். 

டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்திக்கிறார். அப்போது, இந்தியா - பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கலந்துரையாடலிலும் பங்கேற்கிறார். 

இந்த 3 ஐரோப்பிய நாடுகளின் பயணத்தில் கிட்டத்தட்ட 65 மணி நேர நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 25 கூட்டங்களில் பங்கேற்கும் அவர், 7 நாடுகளைச் சேர்ந்த 8 உலகத் தலைவர்களையும் சந்திக்கிறார். அதுமட்டுமின்றி, உலக  நாடுகளை சேர்ந்த 50 தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆயிரத்திற்கும்  மேற்பட்ட இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.