‘தான் பிரதம மந்திரி அல்ல, 130 கோடி மக்களின் முதன்மை சேவகன்‘ - பிரதமர் மோடி

‘தான் பிரதம மந்திரி அல்ல, 130 கோடி மக்களின் முதன்மை சேவகன்‘ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‘தான் பிரதம மந்திரி அல்ல, 130 கோடி மக்களின் முதன்மை சேவகன்‘ - பிரதமர் மோடி

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் ஆகிறது. இதனை ஒட்டி இமாச்சல பிரதேசத்தின் ஷிம்லா மாவட்டத்தில் உள்ள பிரதான் மைதானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி  கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்று பாரம்பரிய முறைப்படி தொப்பி மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன்,  பிரதமர் மோடி  கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக 21 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை பிரதமர் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மோடி, கடந்த 8 ஆண்டுகளில், தான் ஒரு முறை கூட தன்னை பிரதமராக நினைத்ததில்லை என கூறினார். மேலும் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டுமே பிரதமராக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்த கோப்புகள் தன்னை விட்டு அகற்றப்பட்டதும், 130 கோடி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவகனாக மட்டுமே தன்னை கருதியதாகவும் மோடி தெரிவித்தார். தனது வாழ்க்கை முழுவதையுமே மக்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னதாக பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஆர்வமுடன் திரண்டிருந்த ஏராளமான மக்கள், வழிநெடுகிலும் அவருக்கு கரம் அசைத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.