அதிதீவிர புயலாக கரையை கடக்கிறதா ’மோச்சா’...எங்கு? எப்போது?

அதிதீவிர புயலாக கரையை கடக்கிறதா ’மோச்சா’...எங்கு? எப்போது?

வங்கக்கடலில் உருவான 'மோச்சா' புயல் இன்று நண்பகல் மிக அதி தீவிர புயலாக மியான்மர் கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மோச்சா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. போர்ட் பிளேயருக்கு வட- வடமேற்கில் சுமார் 720 கிலோ மீட்டா் தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு தென்- தென்மேற்கில் 400 கிலோ மீட்டா் தொலைவிலும், மியான்மர்க்கு தெற்கு- தென்மேற்கில் 310 கிலோ மீட்டா் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

இதையும் படிக்க : கர்நாடக முதலமைச்சர் யார்? வாய்ப்பு அதிகம் இருப்பது யாருக்கு? சித்தராமையாவா (அ) சிவகுமரா...

இது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று மிக அதி தீவிர புயலாக இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 180 கிலோ மீட்டா் முதல் 190 கிலோ மீட்டா் வேகத்திலும், இடையே மணிக்கு 210 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சூறாவளிக் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மோச்சா புயல் காரணமாக ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 16-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.