கர்நாடக முதலமைச்சர் யார்? வாய்ப்பு அதிகம் இருப்பது யாருக்கு? சித்தராமையாவா (அ) சிவகுமரா...

கர்நாடக முதலமைச்சர் யார்? வாய்ப்பு அதிகம் இருப்பது யாருக்கு? சித்தராமையாவா (அ) சிவகுமரா...
Published on
Updated on
1 min read

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி 136 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.

224 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி  ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  இதில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 36 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதனால் டெல்லி, பெங்களூரு உட்பட நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டம் களைக்கட்டியது.  

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காங்கிரஸார் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்  காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும்,, வருணா தொகுதியில் சித்தராமையாவும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூரிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சி  பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. மேலும் பாஜக அமைச்சர்கள் 15 பேர் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர். 

அதேபோல் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி தாம் போட்டியிட்ட சென்னப்பட்டினம் தொகுதியில் வெற்றி வாகை சூடினார். இந்த தேர்தலிலும் குமாரசாமி கிங் மேக்கராக திகழ்வார் என கருதப்பட்ட நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வகையில் மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெற உள்ளதாக கர்நாடகாவின் ஏஐசிசி பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தொிவித்துள்ளாா். இந்த கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் யார்? என்பது தெரிய வரும். முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்த ராமையா, சிவக்குமார் உள்ள நிலையில், சிவக்குமாருக்கே அதிக வாய்ப்புள்ளதாக எதிா்பார்க்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, காங்கிரசுக்கு கூட்டணிக்கட்சி சுயேட்சை வேட்பாளர் புட்டஸ்வாமி கவுடா ஆதரவு தொிவித்துள்ளாா். இதனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தொிவித்துள்ளாா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com