வயதிற்கு வந்தவுடன் கல்யாணம் பண்ணாதான் சரியா இருக்கும்... எம்.பி.க்களின் சர்ச்சை பேச்சு...

பெண்ணின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக மத்திய அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த இரு எம்பிக்கள் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

வயதிற்கு வந்தவுடன் கல்யாணம் பண்ணாதான் சரியா இருக்கும்... எம்.பி.க்களின் சர்ச்சை பேச்சு...

பெண்ணின் திருமண வயது 18ஆக இருந்தது. இதை 21 ஆக மாற்றும் சட்டமசோதாவிற்கு நேற்று முன் தினம் ஒப்புதல் கிடைத்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு பெரும்பாலானோர் வரவேற்றுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சியின் எம்பிக்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி சையது டஃபைல் ஹாசன் கூறுகையில் வயதிற்கு வந்தவுடன் பெண் திருமணம் செய்து கொள்ளப்பட வேண்டும். பெண்ணிற்கு குழந்தை பிறப்பானது 16 -17 முதல் 30 வயது வரைதான் இருக்கும். எனவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலங்களை பெண்ணின் 16 வயதிலேயே தொடங்கிவிட வேண்டும்.

ஒருவேளை திருமணம் தாமதமானால், இரு தீமைகள் உள்ளன. ஒன்று குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படும். இரண்டாவது அப்படியே குழந்தை பிறந்தாலும் பெற்றோரின் வயது மூப்பால் குழந்தைகள் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதிலும் பிரச்சினை இருக்கும். கடைசி காலத்தில் இருக்கும் போது உங்கள் குழந்தைகள் மாணவர்களாகவே இருப்பர்.

பெண்ணின் திருமண வயதை உயர்த்தியதன் மூலம் நாம் இயற்கையை மீறியுள்ளோம். எனவே ஒரு பெண் வயதிற்கு வந்தவுடனே அவர் குழந்தை பிறக்கும் தன்மையை அடைகிறார். எனவே அந்த வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். உதாரணமாக 16 வயதில் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் அதே வயதில் திருமணமும் செய்து வைக்க வேண்டும்.

18 வயதில் ஒரு பெண் ஓட்டு போடும் போது ஏன் அதே வயதில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு எம்பியான ஷாபிகர் ரஹ்மான் பார்க் கூறுகையில் இந்தியா ஏழை நாடு. சிறிய வயதிலேயே தங்களது பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைத்துவிடதான் பெற்றோர் விரும்புவர். இந்த திருமண வயது திருத்த மசோதாவை நான் ஆதரிக்க மாட்டேன் என்றார்.