ஒமிக்ரான் பாதிப்பில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா... இந்தியா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு...

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஒமிக்ரான் பாதிப்பில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா... இந்தியா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு...

அதிக வீரியமுள்ள வேகமாக பரவக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இம்மாதம் 2 ஆம் தேதி கர்நாடகா வந்தவருக்கு முதல் முறையாக இந்த வகை வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஒமிக்ரான் பரவி வருகிறது. 

இந்நிலையில் நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி ஒமிக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இதில், மகாராஷ்டிரா, டெல்லியில் தலா 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பாதிப்புகளுடன் தெலுங்கானா மூன்றாம் இடத்திலும், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்கள் முறையே 19, 18, 15 ஆகிய பாதிப்புகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தில் 14 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. ஆந்திரா, சண்டிகர், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அத்தியாவசியமற்ற பயணங்கள் மற்றும் பொதுகூட்டங்களை தவிர்க்கவும், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.