லக்கிம்பூர் வன்முறை: உ.பி. அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..!  

லக்கிம்பூர் வன்முறை வழக்கில், உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கை மனநிறைவாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர் வன்முறை: உ.பி. அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..!   

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீதான வன்முறை மற்றும் உயிரிழப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இரண்டாவது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது உத்திர பிரதேச அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லக்கீம்பூர் விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறை விவகாரம் தொடர்பாக உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆஷிஷ் மிஷ்ராவிற்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், நாளை காலை 11 மணி வரை நேரில் ஆஜராகி அவகாசம் வழங்கி உள்ளதாகவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். இதனால் மிகுந்த அதிருப்திக்குள்ளான நீதிபதிகள், இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுக்களை வேறு ஒருவர் செய்திருந்தால் இப்படித்தான் அழைப்பு விடுத்து கொண்டு இருப்பீர்களா..? என்றும்., இதற்குள் அந்த நபரை கைது செய்திருக்க மாட்டீர்களா? என்றும் உத்தரபிரதேச அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், 9 பேர் வரை உயிரிழந்துள்ள இத்தகைய தீவிரமான விவகாரத்தை இப்படிதான் மோசமாக கையாளுவீர்களா? என்று கடுமையாக சாடிய நீதிபதிகள், உத்தரபிரதேச அரசும், காவல்துறையும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், லக்கீம்பூர் விவகாரத்தில் உத்திர பிரதேச அரசின் அறிக்கை திருப்தி இல்லை என்றும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் வெறும் எழுத்து வடிவில் மட்டுமே உள்ளதாகவும் கூறினர். தற்போதைய சூழ்நிலையில் மாநில அரசு விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க காவல்துறை டி.ஜி.பிக்கு வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, வழக்கு விசாரணை நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இருக்கும் என உத்திரபிரதேச அரசு வழக்கறிஞர் உறுதி அளித்ததை தொடர்ந்து, வழக்கு விசாரணை தசரா விடுமுறைக்கு பின்னர் நடைபெறும் என கூறி ஒத்திவைக்கப்பட்டது.