முடிகிறதா விவசாயிகள் தொடர் போராட்டம்..? மத்திய அரசு இன்று முக்கிய அறிவிப்பு...

டெல்லி எல்லையில் விவசாய சங்கத்தினர், போராட்டம் முடிவு வருகிறது. இது தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

முடிகிறதா விவசாயிகள் தொடர் போராட்டம்..? மத்திய அரசு இன்று முக்கிய அறிவிப்பு...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 40 விவசாய சங்கங்கள், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக, பிரதமர் மோடி கடந்த நவம்பர் கடைசி வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, என பல புதிய கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மத்திய அரசுடன் பேச்சு நடத்த, விவசாய சங்க தலைவர் பல்பிர் சிங் ராஜேவால், தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர், இதையடுத்து அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை முற்றிலும் விலக்கி கொள்வது என முடிவு எடுக்கப்படும் என பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். இதனால், விவசாயிகளின் தொடர் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.