அதிருப்தி MLA-க்கள் 16 பேருக்கு தகுதிநீக்கம் நோட்டீஸ்: விளக்கம் அளிக்க காலக்கெடு விதித்த துணை சபாநாயகர்!

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் 16 பேருக்கு தகுதிநீக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ள துணை சபாநாயகர் வரும் 27 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க காலக்கெடு விதித்துள்ளார்.

அதிருப்தி MLA-க்கள் 16 பேருக்கு தகுதிநீக்கம் நோட்டீஸ்: விளக்கம் அளிக்க காலக்கெடு விதித்த துணை சபாநாயகர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-தேசிய வாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான தனி அணியை உருவாக்கி உள்ளார். மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றுள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமானதால் பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  

இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முதலில் 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து சஞ்சய்ராய் முல்கர், ஸ்ரஹிமேன்படேல், ரமேஷ் பார்னரே, பாலாஜி கல்யாண்கர் ஆகிய 4 உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மொத்தம் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நாளை மறுநாளுக்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க சட்டமன்ற துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.