சிறுத்தை தாக்குதல் எதிரொலி; கைத்தடி வழங்கிய தேவஸ்தானம்!

சிறுத்தை தாக்குதல் எதிரொலி; கைத்தடி வழங்கிய தேவஸ்தானம்!

திருப்பதி மலைப்பாதையில்  நடைபாதையாக ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு வனவிலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள கைத்தடி  வழங்கி அனுப்பி வைக்கும் திட்டத்தை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

திருப்பதி  ஏழுமலையானை தரிசிக்க வரும் மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ள கைத்தடி வழங்கப்பட்டு பக்தர்களை திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

நெல்லூரை சேர்ந்த 6 வயது லட்ஷிதா என்ற சிறுமியை சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்தார். இதனையடுத்து  அதேபகுதியில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று பிடிபட்டது. ஐந்து வயது கொண்ட அந்த சிறுத்தை ஆக்ரோஷமாக காணப்பட்ட நிலையில் அந்த சிறுத்தையை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நகம், முடி , ரத்தம் சேகரித்து டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் சிறுமி லட்ஷிதாவை பிடிபட்ட சிறுத்தை சாப்பிட்டதற்கான டி.என்.எ ( மரபணு ) சோதனையில் தெரிய வந்தால் அந்த சிறுத்தையை மீண்டும் வனப்பகுதியில் விடுவதற்கான வாய்ப்புகள் இல்லை அதனை  மிருகக்காட்சி சாலையிலேயே வைத்து பராமரிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் திருப்பதி ஏழுமலையான் கோயில் சுற்றி உள்ள வனப்பகுதியில் கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை சிறுத்தை இனப்பெருக்கம் அதிகரித்து பத்துக்கு மேற்பட்டவை சுற்றி வருகிறது.

இந்நிலையில் நடைப்பாதையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பெரியவர்கள் மட்டும் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மீது வனவிலங்குகள் திடீரென தாக்க வந்தால் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக கைத்தடி வழங்க தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் பாத யாத்திரையாக  நடைபாதையில் திருமலை செல்லும் பக்தர்களுக்கு  தேவஸ்தானம் சார்பில் வழங்கும் கைத்தடி வழங்கி வருகின்றனர். திருமலைக்கு சென்றதும் அந்த கைத்தடிகளை மீண்டும் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் பெற்று மீண்டும் மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. இதேபோல் திருமலைக்குச் இருசக்கர வாகனத்தில்  மலைப்பாதை சாலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே  அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:சென்னையில் மாடு உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்; ஆணையர் தகவல்!