கோரிக்கைகளை ஏற்குமா மத்திய அரசு..? டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ்..?

டெல்லியில் ஒரு வருடங்களுக்கும் மேலாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வாபஸ் ஆகுமா? என்பது குறித்து, இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

கோரிக்கைகளை ஏற்குமா மத்திய அரசு..? டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ்..?

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, தலைநகர் டெல்லியில் உள்ள எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்த விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு தருவது குறித்து முடிவு எடுக்கவும், விவசாயிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறவும் மத்திய அரசு தயாராகி விட்டது. மேலும், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்களால், விவசாயிகள் மீது வழக்கு தொடுக்கப்படும் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இவற்றை குறிப்பிட்டு மத்திய அரசின் ஒரு மாதிரி கடிதம், விவசாய சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்பது என ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகவும், போராட்டத்தை திரும்ப பெறுவது தொடர்பாக இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. எனவே இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், போராட்டம் வாபஸ் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, டெல்லி எல்லையை சுற்றி ஒரு வருடங்களாக முகாமிட்டுள்ள பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.