தாயை புறக்கணித்த மகன்கள்: 4 கிமீ தூரம் தாயின் உடலை சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த மகள்கள்..!

தாயின் இறுதி சடங்கை மகன்கள் புறக்கணித்த நிலையில் 4 கிமீ தூரம் தாயின் உடலை சுமந்து சென்று 4 மகள்கள் இறுதிச் சடங்கு செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாயை புறக்கணித்த மகன்கள்: 4 கிமீ தூரம் தாயின் உடலை சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த மகள்கள்..!

ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் ஜதி நாயக் என்ற மூதாட்டி நேற்று காலமானார். இவருக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். இவரது மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவரது மகன்களும் அவர்களது குடும்பத்தினரும் தனித்தனியாக வசிக்கின்றனர்.கடந்த 10 வருடங்களாக மூதாட்டியை அவரின் மகன்கள் புறக்கணித்து வந்துள்ளனர். கணவர் இறந்த பிறகு மூதாட்டி, சிறு வியாபாரம் செய்து தன்னுடைய உணவுக்கான செலவுகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மூதாட்டி இறந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரது இரண்டு மகன்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் இறுதிச் சடங்குகளை செய்ய வரவில்லை. இந்த நிலையில் கலாச்சார தடைகளை உடைத்து மூதாட்டியின் மகள்கள் 4 பேரும் தங்கள் தாயை தகனம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக சுடுகாடு வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் தங்கள் தாயின் உடலை சுமந்து சென்று 4 மகள்களும் தங்கள் தாயின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர்.