இந்தியா கூட்டணி; பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!

இந்தியா எதிர்கட்சிகளின் மாநாடு

இந்தியா கூட்டணி; பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!

மும்பையில் இந்தியா எதிர்கட்சிகளின் மாநாடு நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் பல்வேறு கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டு 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே வழங்கிய இரவு விருந்துடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து செப்டம்பர் 30ம் தேதி முடிவெடுக்கப்படும் என கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.Image

தொடர்ந்து 2ம் நாளாக நடைபெற்ற ஆலோசனையில் இரு புதிய கட்சிகள் கலந்து கொண்டன. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத், CPM கட்சியின் சீதாராம் யெச்சூரி, மதிமுகவின் வைகோ, விசிக-வின் திருமாவளவன் உள்ளிட்ட 28 கட்சிகளின் 63 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும் எனவும் கூறினார். Image

இதையடுத்து தொகுதிப் பங்கீட்டை உடனடியாக தொடங்கி இறுதி முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்டு 3 முக்கியத் தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தித்தொடர்பு, தேர்தல் மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், காங்கிரசின் கே.சி.வேணுகோபால், NCB-ன் சரத்பவார், ஆம்ஆத்மியின் ராகவ் சத்தா, TMC-ன் அபிஷேக் பானர்ஜி மற்றும் ஜாவத் கான், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், CPI பொதுசெயலாளர் து.ராஜா அக்குழுவில் இடம்பெற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

உத்தவ் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ஜே.டி.யு-ன் லாலன் சிங், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கும் இக்குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஒன்றுபட்டு வெல்வோம் எனக்கூறி இந்தியா கூட்டணி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவாக வெல்வோம் என்ற பெயரில் நாடு முழுவதும் பேரணி நடத்தப்படுவதாகவும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கூட்டம் நிறைவுபெற்றதை அடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது எனவும் அரசியல் லாபத்திற்காக இல்லாமல், நாட்டைக் காக்க அனைவரும் ஒன்று கூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே பேசிய போது மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது கூடாத நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், தேர்தலை முன்னிட்டு கூடுகிறது என கடுமையாக விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, பாஜக ஊழலுக்காக பாடுபடுகிறது எனவும் பிரதமருக்கும் அதானிக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துவோம் எனவும் கூறினார். 60 சதவீத மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா கூட்டணி, மக்களவைத் தேர்தலில் பாஜகவை நிச்சயம் வீழ்த்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து லாலுபிரசாத், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களும் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவ்வாறாக மும்பையில் நடந்து முடிந்த இந்தியா எதிர்கட்சிகள் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை குறிவைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர் அல்லாத பொது ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

இதையும் படிக்க: தேர்தல் நேரத்தில் மட்டும் விஜயலட்சுமி விவகாரம் வெளிவருவது ஏன்? - சீமான்