ஒரே தேசம், ஒரு உரம் திட்டத்தின் கீழ் ‘பாரத் யூரியா ’ அறிமுகம்!

ஒரே தேசம், ஒரு உரம் திட்டத்தின் கீழ் ‘பாரத் யூரியா ’ அறிமுகம்!

ஒரே தேசம், ஒரு உரம் கொள்கையின் கீழ் மலிவான விலையில் தரமான உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 
டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் 2 நாள் வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிரதம மந்திரி "கிசான் சம்ருத்தி கேந்திரா" எனப்படும் விவசாய இடு பொருட்களுக்கான 600 மையங்களையும் திறந்து வைத்த அவர்,  300 அக்ரி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது  இந்தியன் எட்ஜ் என்ற மின் இதழையும்  வெளியிட்டு, ‘ஒரே தேசம், ஒரு உரம்’ என்ற திட்டத்தின் ‘பாரத் யூரியா ’ என்ற பைகளையும்  அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து விவசாயிகளுக்கான 16 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் நிதியையும் விடுவித்தார். 

இதையும் படிக்க: தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம்...ஹெச்.ராஜா பேட்டி!
 
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, புதுவித தொழில்நுட்பங்கள் வேளாண் துறையை ஊக்குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதற்கு பாராட்டு தெரிவித்த அவர், வேளாண்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், மலிவான விலையில் விவசாயிகளுக்கு தரமான உரம் வழங்கப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சொட்டு நீர் விவசாயம் மூலம் மண்வளத்தை பெருக்கவும், இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தியை பன்மடங்காக பெருக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.