செப்.10-ல் வெளியாகும் ’தலைவி’..! 3 மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்ப்பு..!

தற்போதைய சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துமா தலைவி படம்..!

செப்.10-ல் வெளியாகும் ’தலைவி’..! 3 மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்ப்பு..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் விதமாக உருவாகியுள்ள தலைவி திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய தலைவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். இரும்புப் பெண்மணி எனவே அனைவரும் அவரை அழைத்து வந்தனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஒற்றை ஆளாய் அதிமுக கட்சியையும் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழி நடத்தி சென்றவர். கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கக் பலரும் முயற்சித்து வந்தனர். 

அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு கௌதம் மேனனும், பிரசாத் முருகேனும் இணைந்து குயின் என்ற வெப் தொடரை இயக்கினர். மொத்தம் 11 பாகங்களாக உருவான இந்த தொடரில், ஜெயலலிதாவின் குழந்தை பருவம் முதல், இறுதியாக அரசியல் நுழைவு வரை அனைத்தும் படமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் குழந்தை கதாபாத்திரத்தை அனிகா சுரேந்திரனும், இளம் பருவத்தை அஞ்சனா ஜெயபிரகாஷும், அதன் பின்னான பருவத்தை ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தனர். ஓடிடி தளமான MX-பிளேயரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிப்பரப்பப்பட்டது. இதற்கிடையில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் தலைவி என்ற தலைப்பில், ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவானது. எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தியேட்டர்களில் தலைவி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.