டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகம் சுற்றும் வாலிபன்..! திரையில் மீண்டும் எம்.ஜி.ஆர்..!

மீண்டும் திரையரங்குகளில் எம்.ஜி.ஆர்-ஐ பார்க்க துடிக்கும் ரசிகர்கள்..!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகம் சுற்றும் வாலிபன்..! திரையில் மீண்டும் எம்.ஜி.ஆர்..!

எம்.ஜி.ஆரின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் 1973-ம் ஆண்டு வெளிவந்த பிளாக் பஸ்டர் படம் உலகம் சுற்றும் வாலிபன். இரட்டை வேடத்தில் கலக்கியிருந்த இந்தப் படத்தில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, எம்.ஜி.சக்கரபாணி, எம்.என்.நம்பியார், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், எஸ்.ஏ.அசோகன் உட்பட பலர் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான போது, திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை திமுக உயர்த்தியதால், சுவரொட்டிகள் இல்லாமலேயே இப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது. 

எம்.ஜி.ஆரின் அரசியல் பாதியில் திருப்புமுனை ஏற்பட்ட போது இப்படம் வெளியானது. அதுவரை திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர் அக்கட்சியில் இருந்து பிரிந்து அதிமுக என்னும் புதிய கட்சியை தொடங்கினார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜிஆர் விஞ்ஞானியாகவும், புலனாய்வுத்துறை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களியில் அசத்தியிருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் இந்தப் படத்திற்கு பாடல்களை எழுதியிருந்தனர். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எனத் தொடங்கும் பாடல் இன்று வரை அதிமுகவின் பிரதான பாடலாக உள்ளது. அதேபோல, பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாக, சிரித்து வாழ வேண்டும் உட்பட அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. 

கிட்டத்தட்ட 41 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுத்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில், தற்போது மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்திருக்கிறது. இதனையொட்டி நாளை உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.