வெற்றி மாறனின் வெற்றி பயணங்கள்...!

வெற்றியோடு தனது 48வது அகவையில் அடியெடுத்து வைக்கும் வெற்றிமாறன்...!

வெற்றி மாறனின் வெற்றி பயணங்கள்...!

16 வருடங்களாக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வெற்றியோடு கோலோச்சி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து பேக் டூ பேக் படங்கள் கொடுக்காவிட்டாலும், மற்ற இயக்குனர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தன் கதையால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் வெற்றி  மாறன். 

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த வெற்றிமாறன், 2007 ல் இயக்குனராக  தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சங்கர், மணிரத்னம் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்களுக்கு மத்தியில் தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கையோடு இயக்குனராக அவதாரம் எடுத்த வெற்றிமாறன், நடிகர் தனுஷூடன் கைக்கோர்த்து முதன் முதலில் இயக்கிய பொல்லாதவன் படத்திலேயே பல தடைகளை தாண்டி வெற்றியை ஈட்டினார். ஓ இப்படியும் படம் எடுக்கலாம் என்று ஆச்சரியம் படும்படி, ஒரு பைக்கை வைத்து வித்தியாசமான முறையில் கதை களத்தை கொண்டு சென்ற இயக்குனர் வெற்றிமாறன், தனக்கான ஒரு அச்சாரத்தையும் திரைத்துறையில் ஏற்படுத்திகொண்டார். பின்னர் 3 வருடம் இடைவெளிக்கு பிறகு, 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷ் கூட்டணியில் இணைந்த வெற்றி, ஆடுகளம் படத்தை எழுதி இயக்கினார். இந்த படம் 3 தேசிய விருதுகளை பெற்றதோடு, சைமா, விஜய் உள்ளிட்ட விருதுகளையும் தட்டி தூக்கியது. 

இதையும் படிக்க : திருப்பூர் விவகாரம் : முன்விரோதம் காரணம்? திடீர் சாலை மறியலில் பாஜகவினர்!

முதல் படத்தில் பைக் என்றால், இரண்டாவது படத்தில் சேவல் சண்டையை மையப்படுத்தி கதை இயக்கிய இவர், சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றார். அடுத்தடுத்து இரண்டு வெற்றிபடங்களை கொடுத்த இவர், உதயம் என்.எச்.4 ல் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்தார். இப்படி திரைத்துறையில் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரம் எடுத்த இவர், 2016 ல் விசாரணை, 2018 ல் வட சென்னை, 2019 ல் அசுரன், 2020 ல் பாவ கதைகள் என அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களை கொடுத்து தேசிய விருதுகளை குவித்து வந்தார். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் அவர் எடுத்து கொள்ளும் காலம் அதிகமாக இருந்தாலும், அதில் தான் சொல்ல வரும் கருத்தை ஆழமாக பதிவுசெய்து, அதனை மக்களிடம் ஈசியாக கொண்டு சேர்த்து விடுவதே இவருடைய ஸ்பெஷாலிட்டி....

அந்தவகையில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் விடுதலை பாகம் 1. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் காமெடி நடிகர் சூரியுடன் கைக்கோர்த்த இவர், அரசியல் கலந்த ஒரு விடுதலை போராட்டத்தை அழகாகவும் மிக தெளிவாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருந்தார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரையும் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.  இப்படி தனித்துவமான உள்ளார்ந்த அரசியல் பார்வை போர்த்திய கதையால் கிட்டத்தட்ட 16 வருடங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக கோலோச்சி வரும் வெற்றி மாறன், இன்று தன்னுடைய 48வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். பொல்லாதவனாக உருவெடுத்து, ஆடுகளத்தில் ஆட்டத்தை ஆடி, தற்போது தமிழ் சினிமாவின் அசுரனாக  தனது பயணத்தை தொடர்ந்து வரும் வெற்றிமாறனுக்கு, அவரது ரசிகர்களும், திரைபிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.