சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித்... எந்த படத்திற்காக தெரியுமா?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிறந்த நடிகருக்கான விருதை பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித்... எந்த படத்திற்காக தெரியுமா?

திரைப்பட உலகின் உயரிய விருது என்று போற்றப்படும் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. கடந்த 4 ஆண்டுகளாக தொகுப்பாளர் இன்றி நடைபெற்ற நிலையில் இந்த முறை 3 பெண் தொகுப்பாளர்கள் விழாவை தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விருது விழாவை 3 பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

விழாவையொட்டி முதலில் ரெட் கார்பெட் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு பிரிவுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், பத்து பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை தி ஐஸ் ஆஃப் டாமி ஃபேயி திரைப்படத்துக்காக ஜெசிகா சாஸ்டெய்ன் தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கிய ஜேன் கேம்பியனுக்கு வழங்கப்பட்டது. ’கோடா’ சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது ஜப்பானின் டிரைவ் மை கார் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.  சிறந்த ஆவணப்படமாக தி குயின் ஆப் பேஸ்கட்பாலும், சிறந்த துணை நடிகராக கோடா படத்தில் நடித்த ட்ராய் கோட்ஸரும் விருது வென்றுள்ளனர்.

முன்னதாக, விழாவில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்றனர். மேலும் உக்ரைன் மக்களுக்காக நிதி உதவியும் கோரப்பட்டது.