மாற்றுத் திறனாளிகளையும் மகிழ்வித்த கோவை ஹேப்பி ஸ்ட்ரீட்!

மாற்றுத் திறனாளிகளையும் மகிழ்வித்த கோவை ஹேப்பி ஸ்ட்ரீட்!

கோவையில் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள் குழந்தைகள் பெரியவர்களோடு மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.  

கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் Happy Street நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஆடல் பாடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை இடம் பெறுகின்றன. அதுமட்டுமின்றி உடற்பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது.  மேலும் வாரந்தோறும் நடைபெறும் Happy Street நிகழ்ச்சியில், கோவை மாநகர பகுதிகளில் வசிக்கும் பல்வேறு மக்கள் கலந்து கொள்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஆடல் பாடல் என உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இதில் பல்வேறு பொதுமக்கள் அவர்களது தனித்திறமைகளையும் வெளிபடுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக  சாய்பாபா காலனி NSR சாலையில் இந்த வாரமும் Happy Street நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு ஆடல் பாடல்கள் என உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் பல்வேறு பொதுமக்கள் அவர்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இம்முறை கூடுதலாக பல்வேறு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. அதன் படி மக்களே விளையாடும் பெரிய அளவிலான பரமபத விளையாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் ஆகிய விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

வாரம் 6 நாட்கள் தொடர்ந்து பணிபுரியும் தங்களுக்கு வாரம் ஒரு முறை இது போன்று நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இதில் கலந்து கொள்பவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த Happy Street நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு விளையாடியது அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  

இது போன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடுவது தங்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிப்பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:"நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" உதயநிதி ஸ்டாலின்!