வாழ்வின் அபாய கட்டங்களை கடந்து வந்த நடிகர்!

வாழ்வின் அபாய கட்டங்களை கடந்து வந்த நடிகர்!

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் இணை ஆணையர் மனோகர் உள்பட அதிகாரிகளுடன் சின்னத்திரை நடிகர் ரோபோ ஷங்கர் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் போதையால் தான் வாழ்க்கையை தொலைத்ததாகவும், தற்கொலை முடிவுக்கே சென்றதாகவும் கூறி பகீரைக் கிளப்பினார்.  சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் கோடிக்கணக்கானோரின் பாராட்டுக்களைப் பெற்றவர் ரோபோ ஷங்கர். 

மாரி, விஸ்வாசம் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் களம் கண்டவர் சில தேவையற்ற தீயப் பழக்க வழக்கங்களுக்கு இரையானார்.  அதிக மதுப்பழக்கத்தைக் கொண்டவர் சமீபகாலமாக படாதபாடு பட்டு வந்துள்ளார். அதிலும் வீட்டில் கிளி வளர்த்தது பெரும் பூதாகரமாகி கைதாகி சிறை செல்ல நேர்ந்தது.  

அலெக்ஸான்ட்ரியன் கிளிகளை அனுமதியில்லாமல் வளர்த்தார் என்ற குற்றத்துக்காக வனத்துறையினரின் வலையில் விழுந்தார் ரோபோ ஷங்கர். இதைத் தொடர்ந்து ரோபோ ஷங்கருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டது.  

இந்த சம்பவத்தால் தான் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிவிக்கிறார் ரோபோ ஷங்கர்.  நண்பர் ஒருவரின் துரோகத்தால் தீரா சோகத்துக்கு ஆளானதாகவும், ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்புக்கே சென்றதாகவும் கூறினார். 

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கே சென்ற தன்னை பத்திக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால்தான் காப்பாற்றியதாக தெரிவித்தார்.  போதையில் விழுந்து மீண்டு வந்த ஒருவனால்தான் போதைக்கு எதிராக பேச முடியும் என்றும், அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறியவர் ரகாமெடி ரூட்டில் மாற்றி பேசி கலகலப்பை உண்டாக்கினார். 

சமீப காலமாக உடல் மெலிந்தவாறே காணப்பட்ட ரோபோ ஷங்கர் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், தன் தவறுகளை அவராகவே ஒப்புக் கொண்டு பேசியது மாணவர்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி!