நன்றியை கூட வித்தியாசமாக 5 மொழிகளில் சொன்ன நடிகர் கமல்; இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

ஐந்து மொழிகளில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து 5 மொழிகளில் வீடியோ வெளியிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

நன்றியை கூட வித்தியாசமாக 5 மொழிகளில் சொன்ன நடிகர் கமல்; இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அத்துடன் வசூலிலும் சாதனையை படைத்து வருகிறது. இதுவரை கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கொடுத்த படம் இதுதான். பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படத்தின் வசூல் நிச்சயம் தமிழ் சினிமாவில் சாதனை படைக்கும் என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியான இப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் கமல்ஹாசன் 5 மொழிகளிலும் தனது நன்றியை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில் ஒன்றாக தமிழில் பேசிய வீடியோவில், தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான நடிகர்களையும் பாராட்டி வருவதில் தயங்கியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் 'விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.

இந்த படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் கிரிஷ் உள்பட பல தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது நியாயம்.

அதேபோல் திரு விஜய் சேதுபதி, திரு பகத் பாசில், திரு நரேன் உள்பட இந்த படத்தில் நடித்த நடிகர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகும். கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்புக்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் வகையில் அடுத்து நாங்கள் இணையும் படத்தின் எங்கள் நன்றியை காட்டி விடலாம் என்று இருக்கிறேன்.

இயக்குனர் திரு லோகேஷ் அவர்களுக்கு சினிமா மீதும், என் மீதும் இருக்கும் அன்பின் காரணமாக படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் படத்தை செதுக்கினார். ரசிகர்கள் உங்கள் அன்பு தொடரவேண்டும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு நடிகர் கமல் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.