தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாட்டின்   பல்வேறு இடங்களில்  அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், அரசுதுறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தபட்டது.

மேலும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக மாற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அச்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். 

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியை மாநில துணைத்தலைவர் குமரேசன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணிக்கு மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். 

இந்த பேரணியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர்கள் ஊர் புற நூலகர்கள் செவிலியர்கள் போன்ற ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் எனவும் வேலை வாய்ப்பு பறிக்கும் அரசாணை எண் 115 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்றனர். 

ஈரோடு மாநகரின் முக்கிய பகுதியான காளை மாட்டு சிலை அருகில் தொடங்கிய பேரணி, நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் முன்னாள் மாவட்ட செயலாளர் மணிபாரதி, மாவட்ட பொருளாளர் சுமதி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

இதையும்  படிக்க  | ''அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை வழங்கிடுக'' - மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை..!