பல ஆண்டுகளாக வேலை கொடுக்கவில்லை..! பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி...!

பல ஆண்டுகளாக வேலை கொடுக்கவில்லை..! பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி...!

புதுச்சேரியில் அரசு வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலை கேட்டு 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றம் நோக்கி அமைதி பேரணியாக சென்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் முதுநிலை எழுத்தர் பணியிடங்களுக்கு காலியாக உள்ள 116 இடங்களை நிரப்ப அரசு எழுத்துத்தேர்வு வைத்துள்ளது. இதற்கு மாநிலத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பணிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வந்த நிலையிலும் தங்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் வயது கடந்து வருவதாகக்கூறி அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சட்டமன்றம் நோக்கி  பேரணியாக சென்றனர். 

அதோடு, பணி நியமன விதிகளின்படி அரசு உதவியாளர் பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 20 சதவீதமாவது நேரடி பணி நியமன அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் சுதேசி மில்லில் இருந்து ஊர்வலமாக சட்டமன்றம் நோக்கி வந்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிக்க    | கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு அனுமதி...அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!