"புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ கல்வி திட்டம்" ஆளுநர் தமிழிசை தகவல்!

"புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ கல்வி திட்டம்" ஆளுநர் தமிழிசை தகவல்!

புதுச்சேரி மாநிலத்தில் சிபி எஸ்இ பாடத்திட்டம்  அமலுக்கு வந்ததால் புதுச்சேரியில் மிகப்பெரிய கல்வி புரட்சி ஏற்படும் என அரசு பள்ளிகளை ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நகரப்பகுதியில் இயங்கும் ஒரு சில பள்ளிகளில் உரிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. மேலும் சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் பழுதடைந்ததால் அதில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை இதர அரசு பள்ளிகளோடு இணைக்கும் போது ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த வெள்ளிக்கிழமை மாணவிகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என கல்வியமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்து அதற்கான மாற்று ஏற்பாடுகள் இன்று நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நகரப்பகுதியில் இயங்கும் வீரமாமுனிவர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பழுதடைந்துள்ள சுப்ரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, மாணவ மாணவிகள் பாதுகாப்போடும், அனைத்து அடிப்படை வசதிகளோடும் கல்வி பயில்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உடன் வந்த  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அரசு பள்ளிக்கூடங்களும், அரசு மருத்துவமனைகளும் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளடக்கிய தரத்தோடு இருக்க வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும், புதுச்சேரியில் அரசு பள்ளிகளை மேம்படுத்த சி. எஸ்.ஆர் நிதி மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு தனியார் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை தர முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் பள்ளிகளை மேம்படுத்துவதை என் தனி கவனத்தில் ஏற்று செயல்படுத்துவேன் என உறுதியளித்த அவர் புதுச்சேரியில் சிபி எஸ்இ பாடத்திட்டம்  அமலுக்கு வந்துள்ளதால் புதுச்சேரியில் மிகப்பெரிய கல்வி புரட்சி ஏற்படும் என தெரிவித்தார். மேலும், தமிழைத் தவிர்த்து சிபி எஸ்இ இருக்காது எனவும் தமிழ் கட்டாயம் இடம் பெறும் என்றும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!