பில்லி சூனியத்தால் கணவன் உயிருக்கு ஆபத்து ... மர்மநபரின் பேச்சை நம்பி நகையைக் கழற்றி கொடுத்த பெண்கள்!

கணவர் ரத்தத்துடந்தான் வீட்டிற்கு வருவார் என பயமுறுத்தி, பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி பட்டப்பகலில் வீட்டில் இருந்த இளம் பெண்ணிடம் நகையை நூதன முறையில் திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.  

பில்லி சூனியத்தால் கணவன் உயிருக்கு ஆபத்து ... மர்மநபரின் பேச்சை நம்பி நகையைக் கழற்றி கொடுத்த பெண்கள்!

சென்னை ராயப்பேட்டை யானைக்குளம் 6 வது தெருவைச் சேர்ந்தவர் ரியானா பேகம்( 19). தேனாம்பேட்டையில் உள்ள கறிக்கடையில் வேலை பார்க்கும் மன்சூர் என்பவரை ரியானா திருமணம் செய்துகொண்டு 45 நாட்களே ஆகின்றன. திருமணத்திற்கு பிறகும் உடல் நிலை சரியில்லாததால் பெற்றோர் வீட்டிலேயே ரியானா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரியானா ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் பட்டப்பகலில் சாம்பிராணி போடுவதாக மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்ததாகவும், தன்னைப் பார்த்ததும் "உன் கணவருக்கு ஆபத்து இருக்கிறது. வெளியில் சென்றுள்ள அவர், திரும்பி வரும்பொழுது ரத்தத்துடன்தான் வருவார்" எனக் கூறி பயமுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாகவும், அதை எடுக்க முட்டை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவற்றை வாங்கி வருமாறு கூறியதாகவும், அதன்படி தான் அனைத்தையும் வாங்கி அந்த நபரிடம் கொடுத்தபோது, வீட்டில் உள்ள பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி வைக்குமாறு தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பின் கழற்றி வைத்த நகைகளை அந்த நபர் தான் எடுத்து வந்த பானைக்குள் போட்டு துணியை வைத்து கட்டியதாகவும், நீண்ட நேரமாக மந்திரங்கள் சொல்லி, தலையில் கண் மை வைத்துவிட்டு "பில்லி சூனியம் எடுக்கப் பட்டு விட்டது, இந்தப் பானையில் உள்ள நகைகளை நான் சென்று ஒரு மணி நேரம் கழித்து திறந்து எடுத்துக் கொள்ளுங்கள்" எனக்கூறிவிட்டு அவர் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி பானையை ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்க்கும்போது அதனுள் இருந்த காகிதப் பொதியில் நகைக்கு பதிலாக கற்கள் இருப்பதை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததோடு, ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்ததாகவும், தனது நகைகளை மீட்டுத் தருமாறும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நெருக்கமான குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் சாம்பிராணி புகை போடும் ஆசாமி பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி நகைகளை ஏமாற்றி எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.