இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர்கள்; திரண்ட பொதுமக்கள்!

சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரிடம் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் ஆவணங்கள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இளைஞரை தாக்கியதில் இளைஞர் படுகாயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மெயின் பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்ற இளைஞரின் வாகனத்தை நிறுத்திய போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர் மணிகண்டனிடம் ஆவணங்கள் இல்லாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மணிகண்டனை அருகில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற போக்குவரத்து காவலர்கள் ரவி மற்றும் பொன் பாண்டி ஆகியோர், இளைஞர் மணிகண்டனிடம் வாகனத்தின் சாவியை கேட்டுள்ளனர். அவர் சாவியை தர மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து மணிகண்டனின் உறவினர்கள் திரண்டு வந்து காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் இது குறித்து காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர். 

வாகன பரிசோதனையில் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து ஆவணங்கள் இல்லாததற்கு உரிய அபராதமாக ரூபாய் 2500 விதித்த பின்பும் போக்குவரத்து காவல்துறையினர் அத்துமீறி மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கிய சம்பவம் குறித்து பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து காவலர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்த நிலையில் போக்குவரத்து காவலர் ரவியும் மணிகண்டன் தன்னை தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிக்க: 800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு