போனில் அழைப்பு..நேரில் சென்றால் ஓட்டம்...காவல்நிலையம் முன்பு நேர்ந்த பதைபதைக்கும் சம்பவம்!

போனில் அழைப்பு..நேரில் சென்றால் ஓட்டம்...காவல்நிலையம் முன்பு நேர்ந்த பதைபதைக்கும் சம்பவம்!

அம்பத்தூர் காவல் நிலையம் முன்பு பட்டப்பகலில் மர்ம நபர்களால் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா விற்பனையில் தகராறு:

அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். 19 வயதான கார்த்திக் நண்பர்களுக்கும், இதே பகுதியை சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கொலை செய்ய சதிதிட்டம்:

இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததையடுத்து, கார்த்திக்கை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய அந்த கும்பல், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கார்த்திக்கை அழைத்துள்ளது. இதனை நம்பி அவர்கள் அழைத்த இடத்திற்கு வந்த கார்த்திக், எதிர் தரப்பினர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதை பார்த்து சுதாரித்துக் கொண்டு, உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அம்பத்தூர் காவல் நிலையம் நோக்கி வேகமாக ஓடியுள்ளார். 

காவல் நிலையம் முன் வெட்டிக்கொலை:

உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடிய கார்த்திக் மீது  கொலை வெறியில் இருந்த 4 பேர் கொண்ட அந்த கும்பல், அம்பத்தூர் காவல் நிலையம் உள்ளே செல்ல முயன்ற கார்த்திக்கை தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டி சாய்த்தனர். பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

குற்றவாளிகளை தேடும் போலீசார்:

பின்னர் வழக்கம்போல் விரைந்து வந்த காவல்துறையினர், கார்த்திக் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், படுகொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இந்நிலையில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கும் காவல் நிலையம் முன்பு அதுவும், பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அரங்கேறிய இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரிய அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது.