பக்கத்து அலுவலகத்தில் லஞ்சம்; கைது செய்த சிபிஐ; தண்டனை வழங்கிய கோர்ட்!

பக்கத்து அலுவலகத்தில் லஞ்சம்; கைது செய்த சிபிஐ; தண்டனை வழங்கிய கோர்ட்!

அக்மார்க் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற மத்திய அரசு ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்த  ஜெயசீலன் என்பவர் தேன் மற்றும் உணவுப் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அக்மார்க் சான்றிதழ் பெறுவதற்கு தென்காசியில் உள்ள அலுவலகத்தில் 2015ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனின் உள்ள அக்மார்க் சான்றிதழ்களுக்கான தென் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

சென்னை அலுவலகத்தில் ஜெயசீலன் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளபட்டு அவருக்கு அக்மார்க் சான்றிதழ் வழங்கி உத்தரவிடபட்டது.  அலுவலகத்தில் பணிபுரிந்த கிளாக் சீனிவாசன் என்பவர் அக்மார்க் சான்றிதழ் மற்றும் முத்திரை வில்லைகளை ஜெயசீலனிடம் வழங்குவதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத ஜெயசீலன், சாஸ்திரி பவன் கட்டிடத்திலேயே இயங்கிவரும் சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயனக் கலவை தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயசீலன் கொடுத்தபோது, அதை வாங்கிய சீனிவாசனை கையும் களவுமாக பிடித்து 2015 ஆம் ஆண்டு கைது செய்தனர். அவரது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 92 ஆயிரத்து 700 ரூபாயையும் கைப்பற்றினர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான 14 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில்  வழக்கறிஞர், வி.சுரேந்திர மோகன் ஆஜராகி வாதிட்டார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி,  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட  சீனிவாசனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சிபிஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே, அவரை குற்றவாளி என அறிவித்து 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிக்க:பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் 5 கோடி மோசடி; கணக்கியல் நிபுணர் கைது!