ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட வெட்டிக் கொலை!

ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள் ஐந்து பேரை கைது செய்து 24 மணி நேரத்திற்குள் சிறையில் அடைத்து போலீசார் அதிரடியாக செயல்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட வெட்டிக் கொலை!

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 5வது நிழற்சாலை பகுதியில் 27-வயதான விக்கி (எ) மைக்கா, தனது மனைவி இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரான விக்கி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, தனது பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்ற பின், இரவு நண்பர்களுடன் 6வது நிழற்சாலைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

வீட்டை விட்டு சென்ற விக்கி வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால், அவரது மனைவி கவலையில் இருந்துள்ளார். ஆனால், சென்ற அவரோ திரும்பாததற்கு காரணம், அவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாறியாக கத்தியால் வெட்டியுள்ளனர். மேலும், அவருடன் இருந்த சாமுவேல் என்பவரையும் கத்தியால் தாக்கி, அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது.

இந்த தகவல் அவரது வீட்டிற்கு தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் தவித்த விக்கியை அவரது குடும்பத்தார் மீட்டுள்ளனர். பின், 108 ஆம்புலென்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தலை, கை, கைவிரல் என உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காய்த்துடன் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கடும் முயற்சிக்குப் பிறகும், நேற்று (22 ஆகஸ்ட்) காலை சுமார் 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருவிழா நடந்துக் கொண்டிருக்கும் பகுதியில், ஒரு ஆட்டோ ஓட்டுநரை இப்படி கொடூரமாக தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த விக்கியின் தந்தை ராஜா, அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தி, அதில், முதற்கட்ட விசாரணையிலேயே, குற்றவாளிகளான, ஐந்து கொலையாளிகள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் தான் விக்கியை தாக்கி கொலை செய்துள்ளனர் என்ற தகவல் அறிந்த போலீசார், கொலை நடந்த 24 மணி நேரத்திலேயே, அந்த ஐவரையும் கைடு செய்து சிறையில் அடைத்து அதிரடியாக செயல்பட்டுள்ளனர். மேலும், கைதான 5 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது எந்த ஒரு முன்விரோதமும் இல்லை என்றும் மது போதையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்து கத்தியால் வெட்டியதாக கூறினர் என போலீசார் தெரிவித்தனர். கொலை செய்த ஐவர், கரி(எ) ராமு (23), சின்னராசு (25), விநாயகம்(எ)கோட்டி(28), அப்பு(எ)ஜெயவேலு (26), கிருஷ்ணமூர்த்தி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த அடையாளம் தெரியாத ஐந்து பேரை, வெறும், 24 மணி நேரத்திலேயே, தேடி கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்த ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அவர் தலைமையிலான தனிப்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.