மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கணவன்!! விசாரணையில் அம்பலம்

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.

மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கணவன்!! விசாரணையில் அம்பலம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் தான்  ரவி. கூலி வேலை பார்த்து வரும் இவர், ஏற்கனவே திருமணமாகி தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதேபோல் ஆம்பூரை அடுத்த மேல்சானாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சத்யாவும் ஏற்கனவே  திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணத்தை நடத்தினர். ஆனால், இவர்கள் இருவருக்கும் இந்த வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து இவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சத்யா, அவரது தம்பி ஸ்ரீதருக்கு போன் செய்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சேர்ந்து 50ஆயிரம் ரூபாய் கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். இதனால் சத்யாவின் குடும்பத்தினர் மருமகன் ரவி மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதானம் பேசி இருவரையும் பிரச்சனை இல்லாமல் வாழும்படி அறிவுரை கூறி விட்டு வந்துள்ளனர். 

அதற்கு பிறகும் ஓயாத இந்த பிரச்சனையால் மனமுடைந்த சத்யா, நேற்று முன்தினம்  தனது குடும்பத்தாருக்கு போன் செய்து பேசியக்கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்து செல்போனை பிடிங்கி பேசிய ரவி, இன்னும் 2 நாள் கழித்து நானே கொண்டு வந்து உங்கள் வீட்டில் விடுவதாக கூறியுள்ளார்.

இதனிடையே, திடீரென நேற்று காலை சத்யாவின் தம்பி ஸ்ரீதருக்கு போன் செய்த ரவி உன் அக்கா சத்யா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சத்யா வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து கணவர் ரவியிடம் விசாரித்தபோது,  சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் தனது மருமகன் கூறுவதை நம்ப முடியாமல் நின்றுக்கொண்டிருந்த பெற்றோர்கள் கண்ணுக்கு சத்யாவின் கழுத்தில் நகத்தின் கீறல்கள் தென்பட்டுள்ளது. அதைப் பார்த்து  சந்தேகமடைந்த பெற்றோர்கள் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யாவின் கணவரை விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது குடும்ப தகராறில் மனைவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து அறைக்குள் இழுத்து சென்று தூக்கில் தொங்கவிட்டேன் என்று ரவி வாக்குமூலம் கூறியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக ரவியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை அடித்து கொடூரமாக கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.