செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த சூழ்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முந்தினம் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து பதில்மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் கோரிக்கை விடுத்தார்.செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை எனவும், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார் எனக் கூறி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை அமலாக்கத் துறைக்கு அளிக்க அறிவுறுத்திய நீதிபதி, இதுகுறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படியும், மனுவுக்கு பதிலளிக்கும்படியும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க: "கொடநாடு குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும்" -மு.க.ஸ்டாலின்!