சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு...

சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார்  3 நாள் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு...

சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சென்னை சிபிசிஐடி தனிப்படையினர் விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனிடையே, மருத்துவமனையில் இருந்து தப்பி டெல்லி காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறையினர் கைது செய்து, தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல நீதிபதிகள் அனுமதி வழங்கியதையடுத்து, அவரை சிபிசிஐடி காவல் துறையினர் சென்னை அழைத்து வந்தனர்.  இதனையடுத்து கடந்த 18-ந் தேதி சிவசங்கர் பாபாவுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.