வடசென்னையில் கஞ்சா விற்பனை அமோகம்... கஞ்சா வியாபாரியை கைது செய்து நடவடிக்கை...

சென்னை ராயபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரையும், அவருக்கு கஞ்சா சப்ளை செய்துவந்த கஞ்சா வியாபாரியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வடசென்னையில் கஞ்சா விற்பனை அமோகம்... கஞ்சா வியாபாரியை கைது செய்து நடவடிக்கை...

வடசென்னை பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையை தடுக்க துணை ஆணையர் உத்தரவின் பேரில், ராயபுரம் உதவி ஆணையர் உக்கிர பாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் காவலர்கள்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கூறப்படும் இடங்களை சோதனை மேற்கொண்டு வந்தனர். 

அப்போது ராயபுரம் அரசு மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வசந்த் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது ஆந்திராவில் இருந்து கஞ்சாவை எடுத்துவந்து சிறுசிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து வசந்த் செல்போனிலிருந்து அவருக்கு கஞ்சாவை சப்ளை செய்யும் விற்பனையாளர் யார் என்பதை கண்டறிய போலீசார் முற்பட்டு தொடர்பு எண்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்பு கொண்டு பேசினர். அதில் ஒருவர் கஞ்சா சப்ளையர் என தெரியவந்த நிலையில், அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வேண்டும் எனக்கூறி, அவரை வரவழைத்து ராயபுரம் பகுதியில் கையும் களவுமாக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த காந்தி என்பதும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாவை அனுப்பும் கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது. மேலும், பிடிபட்ட இருவரிடம் இருந்தும் 2 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.